3 இடியட்ஸில் நான் நடிக்கிறேன் – ஸ்ரீகாந்த்


’3 இடியட்ஸ்’ படத்தில் தான் நடிக்க விரும்புவதாக ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார். எந்த இயக்குனரும் தங்கள் படங்களில் ஸ்ரீகாந்தை நடிக்கும்படி கேட்டுக்கொள்ளாத போதிலும், ஸ்ரீகாந்த தானாகவே முன் வந்து நடிக்க விரும்புவதாக தெரிவித்துள்ளார். ’3 இடியட்ஸ்’ போன்ற படங்களில் தப்பி தவறி வாய்ப்பு கிடைத்துவிட்டால், மீண்டும் ஒருமுறை திரையுலகை வலம் வரலாம் என்பது ஸ்ரீகாந்தின் எண்ணம் போல. ஒரு ரூபாய் கூட சம்பளம் பெறாமல் ’3 இடியட்ஸ்’ படத்தின் தமிழ் மற்றும் தெலுங்குப் பதிப்புகளில் தான் நடிக்கத் தயார் என்று கூறியுள்ள ஸ்ரீகாந்த், ‘ஜெமினி பிலிம் சர்க்யூட்டிற்காக’ இப்படத்தில் நடிக்க விரும்புகிறாராம்.

மாதவன், சிம்பு என பலர் விஜயுடன் இணைந்து நடிக்க ஆர்வம் கொள்ளாததால், ஒன்று அல்லது இரண்டு வயது மிகுதியான நாயகர்களை ‘ஜெமினி பிலிம் சர்க்யூட்’ தேடி வருகிறது. இதனால் தற்பொழுது எவ்வித பட வாய்ப்புகளும் இன்றி தவித்துவரும் ஸ்ரீகாந்த், ’3 இடியட்ஸ்’ படத்தில் தன்னை நடிக்க வைக்கும்படி ஜெமினி பிலிம் சர்க்யூட்டிடம் கேட்டுக்கொண்டுள்ளார். இதற்காக தனக்கு சம்பளம் ஏதும் தர வேண்டாம் என்றும், ஷங்கரின் படத்தில் இலவசமாக நடிக்கத் தயார் என்றும் ஸ்ரீகாந்த் மேலும் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீகாந்த் நடித்த பல படங்கள் சரியாக ஓடாமல், பல தயாரிப்பளர்களுக்கு நஷ்டத்தினை ஏற்படுத்தி தந்துள்ளது. எனவே ஜெமினி பிலிம் சர்க்யூட் தமிழ், தெலுங்கு என இரண்டு பதிப்புகளிலும் ஸ்ரீகாந்தை நடிக்க வைக்க விரும்பாது என்றே தெரிகிறது. ஒரு வேளை ஜெமினி பிலிம் சர்க்யூட் ஒப்புக்கொண்டாலும், திறமைசாலிகளுக்கு மட்டுமே வாய்ப்பளிக்கும் ஷங்கர், ஸ்ரீகாந்தை ஒப்புக்கொள்ள வேண்டும். இவை இரண்டுமே நடக்காது என்றே தோன்றுகிறது. அடுத்த முறை முயற்சியுங்கள் ஸ்ரீகாந்த்!