விஜய் வருகைக்காக காத்திருந்த மீடியா!


இதோ விஜய் இப்போது புறப்பட்டு விட்டார்... இன்னும் சிறிது நேரத்தில் போயஸ் கார்டனில் ஜெயலலிதாவைச் சந்திக்கப் போகிறார் என்றெல்லாம் ரன்னிங் கமெண்டரி ரேஞ்சுக்கு நேற்று முழுக்கத் தகவல் பரவிக் கொண்டே இருந்ததில் பரபரத்து, களைத்து, அலுத்துப் போனார்கள் பத்திரிகையாளர்கள். கிட்டத்தட்ட நள்ளிரவு வரை ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லத்தின் எதிரே காத்திருந்து ஏமாற்றத்துடன் திரும்பினர்.
காவலன் படத்தை வெளியிடுவதில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது விஜய்க்கு. பெரும்பாலான திரையரங்குகளை உதயநிதி ஸ்டாலின் மன்மதன் அம்பு படத்துக்காக தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ளதால், காவலனுக்கு தியேட்டர் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

திமுக தரப்பில் தனக்கு வேறு சில பிரச்சினைகளும் வருவதாக விஜய் மனக்குறையுடன் இருப்பதாகக் கூறப்படுகிறது. (உதயநிதி ஸ்டாலின் தயாரிப்புத் துறைக்கு வர உதவியாக 'குருவி'க்கு கால்ஷீட் கொடுத்தவர் விஜய்தான்!) இந்த நிலையில்தான் விஜய் தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளைச் சந்தித்தார். இதில் பெரும்பாலானோர் தனிக்கட்சித் துவங்கி, ஜெயலலிதாவுடன் சேருமாறு வற்புறுத்தினர்.


இன்றைய சூழலில் அரசியலுக்கு வருவது தனக்கும் தன் சினிமா எதிர்காலத்துக்கும் சரியாக இருக்கும் என அவர் கருதுவதாகக் கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து அவர் போயஸ் கார்டனுக்கு போய் ஜெயலலிதாவை சந்திப்பார் என்று கூறப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. நேற்று நள்ளிரவு வரை, விஜய் வருவார் என்று கூறப்பட்டதால், ஜெயலலிதா வீட்டு முன்பாகக் காத்திருந்தனர் நூற்றுக்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்கள். ஆனால் விஜய் வரவில்லை. அதேநேரம், ஜெயலலிதாவுடன் பல்வேறு விஷயங்களை போனிலேயே விஜய்யின் தந்தை எஸ்ஏ சந்திரசேகரன் பேசிவிட்டதாகக் கூறுகிறார்கள்.