விஜய் அரசியலுக்கு வரமாட்டார் - எஸ்.ஏ.சந்திரசேகர்


நடிகர் விஜய் கண்டிப்பாக அரசியலுக்கு வர மாட்டார். அரசியல் மேடைகளிலும் ஏற மாட்டார், என்று விஜய்யி்ன் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டம், தாளவாடி மலைப்பகுதியில் உள்ள சூட்டிங் ஸ்பாட்களை பார்வையிட வந்த டைரக்டர் எஸ்.ஏ.சந்திரசேகர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில், 1982ல் வெளியாகி வெற்றிபெற்ற சட்டம் ஒரு இருட்டறை படத்தை இந்த காலத்துக்கு ஏற்றாற்போல மாற்றி சட்டப்படி குற்றம் என்ற பெயரில் எடுத்து வருகிறேன். முதல் பாதி சென்னையிலும், பின் பாதி காடுகள் நிறைந்த பகுதிகளிலும் காட்சிகள் வருகின்றன. அத‌னால் சூட்டிங் ஸ்பாட்டை தேர்வு செய்வதற்காக வந்துள்ளேன், என்றார்.

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவை சந்தித்தது குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர், எனக்கு காமராஜரைத் தெரியும், காங்கிரசை தெரியாது, எம்.ஜி.ஆரை தெரியும், அ.தி.மு.க.வை தெரியாது. தி.மு.க.வை தெரியும் கலைஞரை தெரியாது. தே.மு.தி.க.வை தெரியும் விஜயகாந்தை தெரியாது. மக்களுக்கு நல்லது செய்யும் தலைவர்களை தெரியும். அவர்கள் இருக்கும் கட்சியை எனக்கு தெரியாது. அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை மரியாதை நிமித்தமாகத்தான் சந்தித்தேன். அரசியல் கட்சியில் இணையும் எண்ணம் கிடையாது. ஆனால் நான் அரசியலுக்கு வர வாய்ப்பு உள்ளது. அதை நான் மறுக்கவில்லை. மக்களுக்கு நல்லவற்றை செய்யும் கட்சிக்காக வரும் தேர்தலில் பிரச்சாரம் செய்யவும் வாய்ப்புகள் உள்ளது, என்றார்.

நடிகர் விஜய் அரசியலுக்கு வருவாரா? என்ற கேள்விக்கு, தற்போது விஜய் கண்டிப்பாக நேரடியாக அரசியலுக்கு வரமாட்டார். அரசியல் கட்சியும் தொடங்க மாட்டார். அவர் அரசியல் மேடைகளிலும் ஏறமாட்டார். அரசியலுக்கு வந்தால் கண்டிப்பாக ஜெயிக்க வேண்டும். அதற்கு அஸ்திவாரம் நன்றாக இருக்க வேண்டும். தற்போது அஸ்திவாரம் போட்டு வருகிறேன், என்று கூறினார். மேலும் அவர் கூறுகையில், மக்களுக்கு உதவிகள் செய்வதற்காகத்தான் மக்கள் இயக்கம் தொடங்கப்பட்டது. மக்கள் இயக்கத்தின் மூலம் ஏழைகளுக்கு பல்வேறு உதவிகளை நடிகர் விஜய் செய்து வருகிறார். ரசிகர்களின் திருமண விழாவுக்கு சென்றால்கூட அங்கு ஏழைகளுக்கு ஏதாவது உதவிகள் செய்தால்தான் விஜய் வருவார் என்று கூறிவருகிறேன். இவ்வாறு ஏழைகளுக்கு உதவி செய்வதை ஊக்குவித்து வருகிறேன்,