
தமிழில் சர்ச்சைக்குரிய இயக்குநர் என பெயர்பெற்ற எஸ்.ஜே.சூர்யா நீண்ட நாட்களாக தமிழ் திரைப்படங்களை இயக்கவில்லை. நடிகர் விஜய், புலியாக உருவெடுப்கப்போகிறார் என எஸ்.ஜே.சூர்யாவின் படத்திற்கு முதலில் விளம்பரங்கள் வெளியாகின.
அதன்பின்னர் சூர்யாவுக்கும் விஜய்க்கும் பிரச்சினை வந்ததால் அந்த ‘புலி’ படத்தினை கைவிட்டுவிட்டு, தெலுங்கு படத்தினை இயக்கச் சென்றுவிட்டார் எஸ்.ஜே.சூர்யா. புலி படத்தின் கதையினை தெலுங்கில் பவன் கல்யாணை வைத்து ‘கொமரப் புலி’ எனும் பெயரில் இயக்கிவந்தார் சூர்யா. கொமரப் புலி திரைப்படம் அடுத்த வாரம் தெலுங்கில் வெளியாகிறது.
கொமரப் புலி கம்பீரமாக வந்திருப்பதை அறிந்த விநியோகஸ்தர்கள் அதன் தமிழ் உரிமைக்காக போட்டி போடுகிறார்கள். தமிழில் வெளிவரவேண்டிய படம் தெலுங்கில் வெளியாவதால் சூர்யாவும் மிகவும் கஷ்டப்பட்டு படத்தினை முடித்திருக்கிறார். புலி படத்தினை வேண்டாம் என ஒதுக்கிய விஜய் இப்பொழுது தெலுங்கில் வெளியாகும் கொமரப் புலியினை பிடிப்பதற்காக காத்திருக்கிறாராம்.
அநேகமாக கொமரப் புலியின் தமிழ் ரீமேக்கில் விஜய் நடிப்பார் எனவும் நம்பப்படுகிறது. நாயகன் பவான் கல்யாண், நாயகி நிகேஷா பட்டேல், இயக்குநர் சூர்யா, இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் என பிரபலங்களின் கூட்டணியில் உருவாகியிருக்கும் ‘கொமரப் புலி’, பலரது வயிற்றில் புளியைக் கரைத்திருப்பதென்னமோ உண்மைதான்.